
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடைக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். தேமுதிக கிளை செயலாளராக இருந்து வந்த இவர் ஆக 25-ந்தேதி காலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கட்சி பிரமுகர்களுடன் நடுக்குப்பம் ஏரிக்கரையில் பழைய கொடிக்கம்பத்தைப் புதுப்பித்து நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாகச் சாலையின் எதிரே இருந்த உயர் மின்ழுத்த மின்கம்பியில் கொடிக்கம்பம் சாய்ந்து மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன், மதியழகன், பிரகாஷ், செல்வகுமார், பழனிவேல், செல்வம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையறிந்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் 26-ந்தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருபவரகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். . பின்னர் வெங்கடேசன் வீட்டிற்குச் சென்று அவரது உடலுக்கு மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அப்போது அவர் வெங்கடேசனின் இரு மகன்களின் கல்வி செலவை முழுவதும் ஏற்பதாக அறிவித்தார். இவருடன் தேமுதிக வடக்கு மாவட்டச் செயலாளர் சிவகொழுந்து, மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்டச் செயலாளர் உமாநாத், மாவட்ட அவைத்தலைவர் பாலு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.