தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய துணைவேந்தரை நியமித்துள்ளார். இந்த நியமனத்தை அடுத்து, ஆளுநரை சந்தித்து நியமன ஆணையை பெற்றுக்கொண்டார் டாக்டர் சுதா சேஷையன்.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான போட்டி கடந்த ஒரு மாதமாக தீவிரமாக இருந்தது. இந்த போட்டியில் டாக்டர் சுதா சேஷையன், டாக்டர் விமலா, டாக்டர் சிதம்பரம் ஆகியோர் வேகம் காட்டினர். இந்த நிலையில், மேற்கன்ட மூவரையும் தேர்வு செய்து கவர்னருக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் இந்தப் போட்டியில் தனது கணவர் டாக்டர் சவுந்திரராஜனுக்கு துணை வேந்தர் பதவியை வாங்கித்தர பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
இந்த நிலையில் துணைவேந்தராக சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளராகவும், கைதேர்ந்த மருத்துவராகவும், அனைவராலும் அறியப்பட்டவர். அரசு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்தவர் டாக்டர் சேஷையன் என்பதும் குறிப்பிடத்தக்கது.