தமிழக மக்களுக்கு த்ரில்லர் படம் காட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் பார்த்திபன் இன்று காலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
8 வழிச்சாலைக்காக இந்த அரசு காவல்துறையை வைத்து மக்களை மிரட்டி, துன்புறுத்தி நிலத்தை எடுத்து வருவது தினந்தோறும் செய்திகளில் வெளிவருகிறது. எங்களைக் கொன்றுவிட்டு எங்களின் பிணங்கள் மீது நடந்து சென்று விளைநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கதறுகின்றனர். ஒரு மாணவி கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு நிலத்தை அளவீடு செய்யக்கூடாது மீறினால் அறுத்துக்கொள்வேன் என தடுக்கிறார். சிலர் கிணற்றில் குதித்தும் தற்கொலை முயற்சி செய்கிறார்கள்.
இதை அனைத்தையும் இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. மக்களை பதட்டத்தில் வைக்கிறது. மக்களை இவ்வளவு துன்புறுத்தி 8 வழிச்சாலை அவசியமா? அவ்வளவு வேகமாக போய் என்ன செய்ய போகிறோம்? இந்த திட்டத்திற்கு மாற்றாக வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிலத்தை தர விரும்பாத மக்களிடம் கட்டாயப்படுத்தி நிலத்தை பறிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்திய எடப்பாடி அரசு தொடர்ந்து மக்களை பதட்டத்திலையே வைத்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் ஒரு திரில்லர் படத்தை காட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.