Skip to main content

‘நாங்களே வர்றோம்... நீங்க வர வேணாம்!’ சேலத்தில் நடமாடும் காய்கறி கடைகளைத் திறந்த மாநகராட்சி!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

 vegetable vehicle at salem in corona lockdown
                                              மாதிரி படம்

 

கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக வீடு தேடிச்சென்று காய்கறி, மளிகை சாமான்கள், பழங்கள் விற்கும் நடமாடும் கடைகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் திறந்துள்ளது. 

 

தமிழகத்தில் கரோனா தொற்றுநோய் பரவலின் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை (மே 24) முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று காய்கறி  உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விற்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் 354 வாகனங்கள் மூலம் நடமாடும்  காய்கறி, பழங்கள், மளிகை பொருள் விற்பனைக் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

 

சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 136 காய்கறி, பழங்கள் விற்கும் வாகனங்கள், மளிகை பொருள் விற்பனைக்காக 4 வாகனங்கள் என மொத்தம் 140 வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது.

 

அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 63 வாகனங்கள் மூலமும், அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 74 வானங்கள் மூலமும், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 77 வாகனங்கள் மூலமும் காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

 

நடமாடும் விற்பனையகங்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள், ஆலோசனைகள் இருந்தால் பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 0427 2212844 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

 

இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''பொதுமக்கள் தங்கள் நலன் மட்டுமின்றி, பொது நலன் கருதியும் ஊரடங்கு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். 

 

அத்தியாவசிய பொருள்களை வாங்க வரும்போது ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்