Skip to main content

கீழமை நீதிமன்றங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்! - நாளை முதல் அமலுக்கு வருகிறது! 

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Various restrictions for lower courts ..! Effective from tomorrow ...!


கரோனா பரவல் காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. கரோனா பரவலின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது. நீதிபதிகள் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்து வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சென்னையில் உள்ள அமர்வு நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்கள், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியவை செயல்படுவதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வக்குமார் வெளியிடுள்ள அறிவிப்பில், கீழமை நீதிமன்றங்களில் நேரடி மனுத்தாக்கல் செய்யும் நடைமுறை முழுவதுமாக நிறுத்துப்படுவதாக அறிவித்துள்ளார். அதற்கு மாறாக நீதிமன்ற வளாகத்தின் வெளியே வைக்கப்படும் பெட்டிகளில் மனுக்களைப் போட வேண்டும் என்று அறிவுறித்தப்பட்டுள்ளது.

 

நேரடி விசாரணைக்கு அவசியம் என விருப்பப்படும் வழக்குகளில் இரு தரப்பும் தேதியை முடிவு செய்து, அதற்கான கூடுதல் மனுவுடன் மூன்று நாட்களுக்கு முன்பாக தாக்கல் செய்ய வேண்டுமென தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த மனுவை பரிசீலிக்கும் நீதிபதி, நேரடி விசாரணைக்கு அனுமதித்து, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டும் அனுமதிச்சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிபிஐ மற்றும் எம்.பி. - எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சல் முகவரிகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலமாக மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜாமீன் மனுக்கள் அனைத்தும் காணொளி மூலமாக மட்டுமே விசாரிக்கப்படும் என்றும், அதுதொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்ற அறையில் ஒரே சமயத்தில் 6 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு இல்லாமல் எவரும் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டர்கள் என்றும், உரிய அனுமதி சீட்டு கிடைத்தபின் உள்ளே அனுமதிப்படும் நபர்கள், கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்