நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிதம்பரம் செல்லவுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. மாதவன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 'சுவாமி சகஜானந்தா ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் கல்வி விளக்கேற்றிய மகத்தான மனிதர். தென்னார்க்காடு மாவட்டத்தில் உண்டு உறைவிட பள்ளியை துவங்கி ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேற உழைத்தவர்.
வள்ளலார் சனாதனத்தின் உச்சம் என தமிழக ஆளுநர் ரவியை பேச வைத்து காவி மயமாக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம், அடுத்து சுவாமி சகஜானந்தாவை குறி வைக்கின்றனர். அவரது 135 வது பிறந்ததினத்தில் (ஜனவரி 27) ஆளுநரை வைத்து சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா நிகழ்வை நடத்த உள்ளனர்.
ஆளுநர் வருகையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிதம்பரம் அனைத்து கட்சிகள் சார்பில் நாளை ஜனவரி 27 காலை 9:00 மணி அளவில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழுவின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்' என தெரிவித்துள்ளார்.