கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுயமாக தொழில் தொடங்க அரசு உதவ முன்வர வேண்டும் என்றார் வக்பு வாரிய நிர்வாகியான பாத்திமா முஸப்பர் ஆலிமா.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் நடைபெற்ற மீலாது மாநாட்டில், பெண்கள் மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்,
"கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்கள் பல கிராம மக்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப்பிறகு தற்போது நடந்துவரும் அதிமுக ஆட்சி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. வக்பு வாரிய சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சுமார் 6 ஆயிரம் பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வக்பு வாரியத்துக்கு தமிழக அரசு வழங்கும் மானியத்தை அதிகரிக்க வேண்டும்.
கூத்தாநல்லூர் பகுதியில் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக தொழில் தொடங்க அரசு உதவி செய்ய வேண்டும். இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் ஆலோசனைப்படி இந்தியாவில் மதச்சார்பற்ற சகோதரத்துவத்தை நிலை நாட்டும் அமைப்புகளுடன் கை கோர்த்து உள்ளோம். அதன்படி வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைப்போம்". என்றார்.