கல்வி நிறுவன வளாகங்களை வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் 2016-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்துக்காக கல்லூரி கூட்ட அரங்கம் வாடகைக்கு விடப்பட்டது. கல்வி நிறுவனத்துக்கு மின்சார கட்டணத்தில் மானியம் வழங்கப்படும் நிலையில், கல்வி நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்காக, தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் சுஜிதா என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பொது நல நோக்குடன் தொடர்ப்பட்டுள்ள இந்த வழக்கை, தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்க தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்தார். அதன்படி, மின் கட்டண சலுகை, சொத்து வரி விலக்கு போன்ற சலுகைகளைப் பெறும் பொறியியல், மருத்துவம், பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தங்கள் வளாகங்களை கல்வி சாராத பிற வணிக நோக்கிற்காகப் பயன்படுத்துவது தொடர்பாக, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு, கல்வி நிறுவன வளாகங்கள் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக உயர் கல்வி துறை, பள்ளிக் கல்வித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, மின் துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சென்னை மாநகராட்சி ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.மேலும், லயோலா கல்லூரியையும் வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.