Skip to main content

வைகோ எம்.பி.யா இருந்திருந்தா மோடிய...

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
vaiko


 

 

தஞ்சை, திருவாரூர் நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான தென்னை, மா, பலா, வாழை, முந்திரி, சவுக்கு, யூகலிப்டஸ் என பயன் மரங்கள் அனைத்தும் சாய்ந்த நிலையில் மக்கள் பெரிதும் துயரமான நிலையில் பரிதவித்து வருகின்றனர். தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்து மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்து நிர்கதியாய் தவிக்கின்றனர். தமிழக அரசும், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.


நேற்று வரை 5 ஏக்கரில் தென்னந்தோப்பு இருந்தது. நேற்றிருந்த பலா மரங்கள் ஐயோ என் செய்வோம்..பிள்ளைகளைப் போல வளர்த்தோம்... அவை வளர்ந்து எங்களைக் காத்து வந்தன. இந்த புயல் பாதிப்பால் எல்லாம் சாய்ந்தன. மரங்கள் மட்டும் வீழவில்லை... எங்கள் நம்பிக்கை..கனவுகள் எல்லாம் வீழ்ந்து விட்டனவே என்ற அழுகுரலும்..விம்மலும் இந்த மாவட்டங்களில் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. எதிர்காலம் சூனியமாகிவிட்டதே என்ற அச்சம்தான் கடந்த மூன்று நாட்களாக விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் பிரதிபலிக்கின்றன.


இந்நிலையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை தலைவர் வைகோ தலைமையில் பார்வையிட ஒரு குழுவும், திருவாரூர், நாகப்பட்டணம் ஆகிய மாவட்டங்களைப் பார்வையிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி திமுக பொருளாளருமான அ.கணேசமூர்த்தி தலைமையிலான இரு குழுக்களையும் அறிவித்து, உடனடியாக 25-ந் தேதி புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் இருந்து துவங்கி திருக்கோகர்ணம் புதுக்கோட்டை நகரப் பகுதி என பார்வையிட்ட பின்பு, இரவு கந்தர்வக்கோட்டையில் புயல் சேதங்களைப் பார்வையிட்டுவிட்டு திறந்த வேனில் நின்று பேசினார்.


 

vaiko

 


கந்தர்வக்கோட்டையில் அவர் பேசிய வேனைச் சுற்றிலும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு நின்றனர். கஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டி விட்டது. மின்வாரிய ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர். அதிகாரிகள் களத்தில் குதித்து போராடி வருகின்றனர். ஏ..இயற்கையே எங்கள் மக்களை ஏன் இப்படி புரட்டிப் போடுகிறாய். கடல் சீற்றம் கொள்ளும்போதெல்லாம் எங்கள் மீனவர்கள், விவசாயிகள் வாழ்வே நாசமாகிப் போகிறதே, இந்த அப்பாவி மக்கள் மீது உனக்கென்ன கோபம்.


தமிழக அரசும், முதல்வரும் மரங்களுக்கு வழங்கும் நிவாரணத் தொகையை பன்மடங்கு உயர்த்தித் தரவேண்டும். அரசு நடத்தி வரும் பதினோரு தென்னங்கன்று வளர்ப்பு நிறுவனங்களில் இருந்து தென்னங்கன்றுகளை வாங்கி, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தோப்புகளில் முற்றிலும் இலவசமாக நட்டுத்தர வேண்டும். விவசாயிகளே கவலைப்படாதீர்கள். தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள். வாழ்க்கையே சூனியமாகிவிட்டது என்று கலங்காதீர்கள். ஒரு அழிவிற்குப் பின்பும் நிமிர்ந்த நாடுகள் உண்டு. இந்த இயற்கைப் பேரழிவில் இருந்தும் நீங்கள் முன்னேற முடியும்.


உங்கள் மூலதனமே தன்னம்பிக்கைதான், அதை எச்சூழ்நிலையிலும் இழந்து விடாதீர்கள். தன்னார்வ அமைப்புகளும், தனியார் நர்சரிகளில் இருந்தும் என்னைத் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக தெனனங்கன்றுகள் தருவதாகக் கூறுகின்றனர். தமிழக அரசு இடங்களைக் காட்டட்டும் நாங்களே லாரிகளில் கொண்டு வந்து கன்றுகளைத் தருகிறோம். ஆனால் அரசே நட்டுத் தரவேண்டும் என தலைவர் வைகோ பேசினார். அரசும், அமைப்புகளும் நிவாரண உதவிகளை அளித்து வரும் சூழலில்..புதுக்கோட்டை..கந்தர்வக்கோட்டை மக்களைச் சந்தித்து தலைவர் வைகோ பேசிய பேச்சு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை..புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவப்பூரில் இப்பயணம் தொடங்கும்போது, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு எடப்பாடி அரசு முதுகெலும்பில்லாத அரசு என தலைவர் வைகோ பதிலளித்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், இனி நீங்கள் தான் எங்கள் முதுகெலும்பாக இருந்து காக்க வேண்டும் என்றார். கந்தர்வக்கோட்டை செல்லும் வழியில் திமுக விவசாய அணி மாநிலத் துணைச் செயலாளர் வி.என்.மணி அவர்களுடன் திரண்டு நின்ற பொதுமக்களிடம் புயல் பாதிப்பு குறித்து  வைகோ பேசியபோது, இவரு எம்.பி.யா இருந்திருந்தா மோடிய கிழி.. கிழின்னு கிழிச்சு நம்மள காப்பாத்தியிருப்பாரப்பா என்றார்.


நம்பிக்கையற்றவர்களுக்கு... புது நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் வைகோ அரசியல்வாதிகளில் மனிதநேயம் மிக்கவர்கள் என்பதை உணர்த்தி வருகிறார். பொருட்களை இழந்தவர்களுக்கு அவர்களுக்கு எவ்வளவு தான் உணவு, பொருட்கள் என்று கொடுத்தாலும் அவர்கள் அடுத்த கட்ட வாழ்க்கை நகர்வுக்கு கொண்டு செல்வதற்கு வைகோ இந்த பேச்சு அவர்களை தன்னம்பிக்கை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை!


    

 

சார்ந்த செய்திகள்