இன்று காலை நந்தனத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், சுபஸ்ரீ மரணம் மற்றும் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், “எனது கட் அவுட்டினை எங்கும் வைக்க நான் என்றுமே அனுமதித்தது இல்லை. இன்று தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புக்குத் தேர்வில் நன்மையும் இருக்கிறது. ஆனால், திடீரென ஒரு முடிவு என்பதுதான் யோசிக்க வேண்டியது. தேர்வு அவசியம். இல்லையெனில் நாம் தயாராக முடியாது.
அந்த விழிப்புணர்வு வரட்டும். கன்னியாகுமரி கிராமத்தில் சிறிய பள்ளியில் பயின்று இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன். அவர் தோல்வி அடையவே இல்லை. அவரது முயற்சியில் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார்.
இன்னும் ஒரு வருடத்திற்கு ஆர்பிட்டர் அங்கு நிலவை சுற்றிக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பெரும் தொகை முதலீடாக வரும் என அறிவித்திருக்கிறார்கள். இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் எனும் கேள்வி எழுந்து வருகிறது” என்றார்.