திருச்சி திருவெறும்பூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உஷா பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி உயிரிழந்த திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை கணேசா ரவுண்டானா பகுதியை பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பலியான உஷாவின் கணவர் தர்மராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
உலக மகளிர் தின நாளில் காவல்துறை அதிகாரியின் தவறான நடவடிக்கையால் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்துள்ளார். இது துரதிர்ஷ்ட வசமானது. பெண் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையுடன் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மக்கள் காவல்துறையை நம்புகின்றனர். ஆனால் காவல் துறையே இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அடிப்படை பாதுகாப்பு உணர்வையே தகர்க்கிறது.
இதைக்கண்டித்து அதிக அளவில் இங்கு கூடிய பொதுமக்களை தகுந்த முறையில் கையாள வேண்டிய காவல்துறை, வேடிக்கை பார்த்தவர்களை எல்லாம் கைது செய்துள்ளது. இதுபோன்று மக்கள் திரளக்கூடிய சம்பவங்களில் சூழ்நிலையை லாவகமாக கையாளக்கூடிய திறன் படைத்த அதிகாரிகளை கொண்டு காவல் துறைக்கு பயிற்சியளிக்க வேண்டும். உஷாவுக்கு நேர்ந்த கொடூரம் இனி யாருக்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இவ்வாறு கூறினார்.