புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொகுதி இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடவடிக்கை எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குடிநீரில் மலம் கலந்த சமூகவிரோதி மீது நடவடிக்கைக் கோரி அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றன.
இந்த நிலையில், அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி சக்திதேவி உள்ளிட்ட பல பெண்கள் நாகுடி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், “ஜனவரி 1 ஆம் தேதி மாலை பெருங்காடு ஊராட்சி வைராண்டி கண்மாயில் நாங்கள் 4 பெண்கள் குளித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மஞ்சக்கரையைச் சேர்ந்த இருவர், ‘உங்களைத் தான் இந்த கண்மாயில் குளிக்கக் கூடாது என்று சொல்லியாச்சே. அப்புறம் ஏன் குளிக்க வந்தீர்கள்’ எனக் கொச்சையாகப் பேசிக்கொண்டே கரையில் வைத்திருந்த எங்களது மாற்று உடைகளை அள்ளிச் சென்று புதர்களில் வீசியதோடு, இனிமேல் வந்தால் வெட்டுவோம் என்பது போல அரிவாளைக் காண்பித்தனர். அதனால் உயிருக்கு பயந்து எங்கள் துணிகளைக் கூட எடுக்காமல் குளித்த உடையோடு வீடு போய் சேர்ந்தோம்.” என்று கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் தீண்டாமை புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அதிகாரிகள், போலீசார், சமூக ஆர்வலர்கள் கொண்ட தனி குழு அமைத்து விசாரணையும் ஆய்வும் செய்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தால் நல்லது என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.