Skip to main content

“பெற்றவனை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் 

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Udhayanidhi is the one who can make the parents happy Chief Minister M.K.Stalin

 

சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (25.07.2023) நடைபெற்ற 'முதலமைச்சர் கோப்பை - 2023' மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில், முதலமைச்சர் கோப்பை 2023 தொடர்பான “களம் நமதே” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கக்கூடிய இந்தத் துறையின் அமைச்சர் உதயநிதிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாரே என்று வளர்ந்த பிள்ளையைப் பார்த்து சில பெற்றோர் நினைப்பதுண்டு. விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாகச் செயல்படுகிறார் என்று பெற்றவனை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார். விளையாட்டைப் பார்ப்பவர்களுக்குக் களிப்பாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்களும், அந்தப் போட்டிகளில் விளையாடுபவர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும்.

 

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ‘அந்தத் துறையை நான் நிர்வகிப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது’ என்று அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் சொன்னார். அதாவது, ஏராளமான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதைப் பாராட்டும் வகையில் இப்படி உயர்வாகச் சொன்னார் கலைஞர். அந்த வகையில் இப்போது எனக்கு விளையாட்டுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. நாள்தோறும் ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எப்போது பார்த்தாலும் விளையாட்டு வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி இருக்கிறார். விளையாட்டுத் துறையால் அமைச்சர் பெருமை அடைவதும் அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத் துறை சிறப்பு அடைவதுமான காட்சிகளை நான் காண்கிறேன்.

 

இவை எல்லாம் விளம்பரத்துக்காகச் செய்யப்படுபவை அல்ல. விளையாட்டுத் துறையின் செயல்கள் மூலமாக இத்தகைய பாராட்டுகள் கிடைக்கிறது. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. விளையாடும் வீரர்களுக்கு உடல் திறன் மேம்படுகிறது. அதனைப் பார்த்து ரசிப்பவர்களின் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விளையாட்டைக் காண வந்தவர்களில் நாளைய சாம்பியன்களும் நிச்சயம் இருப்பார்கள். இதுதான் விளையாட்டின் சிறப்பம்சம்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்