பள்ளிபாளையம் அருகே, அக்கா, தங்கை ஆகிய இருவரையும் கடத்திச் சென்று விடுதியில் அடைத்து வைத்து, பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள புதன்சந்தை பேட்டையைச் சேர்ந்தவர் ரீனா (17). இவருடைய தங்கை டீனா (15). (ரீனா, டீனா பெயர்கள் கற்பனையானவை). உள்ளூரில் உள்ள அரசுப்பள்ளியில் ரீனா 12ம் வகுப்பும், டீனா 10ம் வகுப்பும் முடித்துள்ளனர். இருவரும் பொதுத்தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தனர். ஏற்கனவே தந்தையை இழந்துவிட்ட இவர்கள், தாயின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.
கோடை விடுமுறையின்போது, அவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்தனர். கடந்த சனிக்கிழமை (ஜூன் 18) காலையில் வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர். வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு கடையில் இருந்து கிளம்பிய அவர்கள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மகள்களை காணாததால் அதிர்ச்சி அடைந்த தாயார், பல இடங்களில் தேடி பார்த்தார். அவர்களுடைய தோழிகளுக்கும், வேலை செய்து வரும் ஜவுளிக்கடைக்கும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். ஆனால் மகள்கள் எங்கு சென்றனர் என்ற விவரங்கள் தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்த பரபரப்பான நிலையில் காணாமல் போன சிறுமிகளின் தாயாரின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள்கள் இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்களா? என்று மட்டும் கேட்டுவிட்டு பேச்சைத் துண்டித்து விட்டார். இதனால் மேலும் பதற்றம் அடைந்த சிறுமிகளின் தாயார், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர், சிறுமிகளின் தாயாரிடம் பேசிய அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
விசாரணையில், அந்த அலைபேசி எண், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் பெயரில் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் மேல்நிலைத்தொட்டி சுத்தம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதை கண்டறிந்தனர். சந்தேகத்தின்பேரில் சந்தோஷை பிடித்து விசாரித்தபோது, அவரும், அவருடைய நண்பர் வினோத் என்பவரும் சேர்ந்து, தாங்கள் வேலை செய்து வரும் நிறுவனத்தின் காரில் ரீனா மற்றும் டீனாவை கடத்திச்சென்று, நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளிபாளையம் காவல்நிலைய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) அதிகாலையில், நாமக்கல் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட விடுதிக்கு விரைந்து சென்று, இரண்டு சிறுமிகளையும் மீட்டனர். சந்தோஷ், வினோத் ஆகிய இருவரிடமும் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் இருவரும் சிறுமிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள் என்பதும், சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் சிறுமிகளை மடக்கிய இளைஞர்கள் இருவரும் அவர்களை காரில் கொண்டு சென்று வீட்டில் இறக்கி விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துள்ளனர்.
அதை நம்பி காரில் ஏறிய சிறுமிகளை நாமக்கல்லில் உள்ள விடுதிக்கு அழைத்துச்சென்று அடைத்து வைத்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளது தெரியவந்தது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றம் என்பதால், தொடர் விசாரணைக்காக இளைஞர்கள் இருவரும் திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகளுக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.
அக்கா, தங்கை இருவரையும் கடத்திச் சென்று விடுதியில் அடைத்து வைத்து வன்புணர்வு செய்த இரண்டு இளைஞர்கள் மீதும் போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
கைதான இருவரையும், காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் நாமக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.