நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் நேற்று திருப்பூரில் ரிதுஸ்ரீ என்ற மாணவியும், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்யா என்ற மாணவியும் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வு தோல்விக்காக கடந்த 2017ஆம் ஆண்டு அரியலூர் அருகே குழுமூரைச் சேர்ந்த அனிதா, 2018ல் விழுப்புரம் பிரதிபா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
''தமிழக மாணவச்செல்வங்களின் மருத்துவ கனவில் மண்ணள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த அன்பு மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது ? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் இரண்டாண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது?
பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்?'' என அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.