தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் சமூகவலைத்தளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதி திருவேங்கடம் என்பவர், சென்னை மாதவரம் அருகே தப்பியோட முயன்ற போது காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என அவரது குடும்பத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், தமிழகக் காவல்துறை அரங்கேற்றியிருக்கும் என்கவுண்டர் சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கொலை நடந்த அன்றே தாமாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்த விசாரணைக் கைதி திருவேங்கடம், தப்பியோட முயன்றதன் காரணமாகவே சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முன்பின் முரணாக அமைந்துள்ளது. எனவே, விசாரணைக் கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்வதோடு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.