அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சசிகலாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?
சிறையில் சசிகலா நலமாகத்தான் உள்ளார். 40 நிமிடம் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். நலமாக உள்ளார்.
சிறையில் சசிகலா கன்னடமும், இந்தியும் கற்றுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?
அதைப் பற்றி நான் கேட்கவில்லை. எனக்கு தெரியாது.
எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லையே?
எச்.ராஜாவை தமிழக போலீசார் கைது செய்ய மாட்டார்கள்.
பாஜக தேசிய தலைவர் எச் ராஜா. அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நிறைய மக்கள் நலப்பணிகளை செய்திருக்கிறார் என்று அமைச்சர் உதயகுமார் மதுரையில் தெரிவித்திருக்கிறாரே?
உதயகுமார் காமெடியா பேசுவதற்கெல்லாம் என்னிடம் கேட்டு என் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். நீதிமன்றத்தை அவமதித்த எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். தரக்குறைவாக பேசி வருகிறார். அவரை இவர்கள் கைது செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இங்கே அடிமை அரசாங்கம் நடக்கிறது.
சோபியாவின் முழக்கம் வன்முறையை தூண்டுவதாக இருந்தது. ஆனால் எச்.ராஜாவின் கருத்து வன்முறையை தூண்டுவது மாதிரி இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறாரே?
வன்முறையை தூண்டாமல் அமைதி புறாவா சொன்னாராமா? பாண்டியராஜனெல்லாம் மந்திரியா இருக்காருங்குறத்துக்காக நீங்கள் அவரது வார்த்தைக்கு மரியாதை கொடுக்கலாம். பொதுமக்கள் அமைச்சர்களின் பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. பதவியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள்.