ஓய்வுபெற்ற தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. வி.ஆர்.லட்சுமி நாராயணன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91. சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருநத அவரது உடலுக்கு காவல்துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட லட்சுமி நாராயணன் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். பின்னர் சட்டப்படிப்பை முடித்த அவர், குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று 1951ல் ஐ.பி.எஸ். அதிகாரியானார். மதுரை மாவட்ட ஏ.எஸ்.பி.யாக பணியாற்றிய அவர், சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டார். டெல்லியில் பணியாற்றிய அவர் சிபிஐ-யில் இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார்.
1977ல் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை துணிச்சலாக அவரது வீட்டிற்கே சென்று கைது செய்தவர் வி.ஆர்.லட்சுமி நாராயணன். 1980ல் மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானபோது, தன்னை கைது செய்த வி.ஆர்.லட்சுமி நாராயணனை சிபிஐ இயக்குநராக்க முன்வந்தார். அப்போது எம்ஜிஆர், தமிழக பணிக்கு லட்சுமி நாராயணன் தேவை என்று இந்திராவிடம் கோரிக்கை வைத்து, மாநில பணிக்கு கொண்டு வந்ததுடன் லட்சுமி நாராயணனை டிஜிபி ஆக்கினார்.
சட்டம் ஒழுங்கு டிஜிபி-ஆக இருந்த லட்சுமி நாராயணன் தமிழக காவல்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி-ஆகவே லட்சுமி நாராயணன் 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 'நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்' என்ற நூலை எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோதரர் வி.ஆர்.லட்சுமி நாராயணன்.