Skip to main content

கோட்டாட்சியர் மீது மண்ணெண்னை ஊற்றி கொலை செய்ய முயற்சி!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
governor

 

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோயிலில் நீர்வழி ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றும் முயற்சியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது சாமியார் ஆறுமுகசாமி ஆதரவாளர்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன்  மீது மண்ணெண்னையை ஊற்றினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

 

 சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூசாரி ஆறுமுகசாமி மதுபானங்களை குடித்துகொண்டு சுருட்டை புகைத்தவாறு பக்தர்களுக்கு குறிசொல்லி வருகிறார். மேலும் இவர் மீது நரபலி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் இந்த கோயிலுக்கு பின்புறம் உள்ள நீர்வழிப்பாதையில் சாமியார் ஆறுமுகசாமி ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளார். இந்த கட்டிடத்தை இடிப்பதற்காக சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் திங்களன்று வருவாய் துறையினருடன் கோயிலுக்கு வந்தார்.

 

அப்போது சாமியாரின் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பை  அகற்ற வந்த பொக்லைன் எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது சிதம்பரம் கோட்டாசியர் ராஜேந்திரன் மீதும் மண்ணெண்னை பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றச் சென்ற தன்னை சாமியார் ஆறுமுகசாமியும் அவரது ஆதரவாளர்களும் கொல்ல முயன்றதாக சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் கோட்டாட்சியர் ராஜேந்திரன்  புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 இதனை தொடர்ந்து மதிய நேரத்திற்கு பிறகு 100க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில்  சிதம்பரம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப்பொறியாளர்கள் பார்த்திபன், சண்முகம், பாஸ்கர் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், டிஎஸ்பி ஜவர்ஹர்லால், சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, போலீஸார், புவனகிரி வட்டாட்சியர் ஹேமாஆனந்தி மற்றும் வருவாய்த்துறையினர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட 3 கட்டிடங்களை  அகற்றினர். இது சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்