Skip to main content

மருத்துவர் இல்லாமல் நடைபெற்ற பிரசவம்; சோகத்தில் உறவினர்கள்

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

trichy thiruverumbur primary health center issue 

 

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் நடைபெற்ற பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விமலன். இவரது மனைவி ஸ்ரீநிதி (வயது 26) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரசவத்திற்காக ஸ்ரீநிதி திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது அங்கு டாக்டர்கள் இல்லை என்பதால், அங்குப் பணியில் இருந்த நர்சுகள் பிரசவம் பார்த்து உள்ளனர். இந்நிலையில், குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனை அங்கு இருந்த நர்சுகள் உடனடியாக அவரது உறவினர்களிடம் கூறவில்லை. வெகு நேரம் கழித்தே உண்மையைச் சொல்லியுள்ளனர். டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்ததாகக் கூறி விமலன் மற்றும் ஸ்ரீநிதி உறவினர்கள் 150 பேர் மருத்துவமனையின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனையறிந்து, உடனடியாக அங்கு டாக்டர்கள் வந்தனர். தொப்புள்கொடி குழந்தையின்  கழுத்தைச் சுற்றி இருந்ததால் குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இதை விமலன் உறவினர்கள் ஏற்கவில்லை. எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் வந்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதுகுறித்து, திருவெறும்பூர் போலீசார் விசாரித்து வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு அவர்கள் சமாதானம் அடைந்தனர். இதனிடையே, இறந்துபோன குழந்தையின் உடல் திருச்சி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்