Skip to main content

விரிவுரையாளருக்கு தர்ம அடி! ஸ்பாட்டுக்கு வந்த டி.எஸ்.பி!

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Trichy Lalkudi government college professor issue

 

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கௌரவ விரிவுரையாளருக்கு மாணவர்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் கைது செய்ய வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

 

லால்குடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான வினோத் குமார் கௌரவ விரிவுரையாளராக வணிகவியல் துறையில் பணி மாறுதலாகி பணியில் சேர்ந்துள்ளார்.

 

இந்த நிலையில் கௌரவ விரிவுரையாளர் வினோத்குமார், வணிகவியல் துறையில் பயிலும் இரண்டாமாண்டு மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அறைக்கு மாணவிகளை தனியாக வர சொல்லி பாலியல் ரீதியாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை சக மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருந்தபோது அதை வகுப்பில் பயிலும் மாணவர்களிடம் தெரிவித்ததுள்ளனர். ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌரவ விரிவுரையாளர் வினோத்குமாரிடம் கேட்டபோது உங்கள் வேலையை பாருங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், வினோத் குமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதில் கௌரவ விரிவுரையாளர் வினோத்குமார் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் உள்ள கண்ணாடியை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த லால்குடி சரக டி.எஸ்.பி. அஜய் தங்கம், கல்லூரிக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதனைத் தொடர்ந்து கௌரவ விரிவுரையாளர் வினோத் குமாரை கைது செய்ய வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் கௌரவ விரிவுரையாளர் வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்