2019- ஆம் ஆண்டு அக்டோபர் 2- ஆம் தேதியைத் தமிழகம் மறக்க முடியாது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளானர் கல்லூரி முன்பு உள்ள லலிதா ஜுவல்லரி கடையின் பின்புற சுவற்றைத் துளைப்போட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தென்னிந்தியாவையே உலுக்கியது.
இந்தக் கொள்ளையில் திருவாரூர் முருகன் உள்பட அவருடைய உறவினர்கள் சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து தங்க நகைகளை மீட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கொள்ளையன் முருகன் மற்றொரு கொள்ளைச் சம்பவத்தில் கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த முருகன் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலையை உருவாக்கியது. முருகன், தற்போது பெங்களூர் சிறைச்சாலையில் கை, கால் செயலிழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இதற்கு முன்பு கொள்ளையடித்த பணத்தில் செம ஜாலியாக சுகபோகமாக வாழ்ந்ததில் அவனுக்கு பால்வினை நோய் வந்ததும், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறான் என்கிற தகவல் விசாரணையில் வெளியான நிலையில் தற்போது கை, கால் செயலிழந்து இருப்பது திருவாரூரில் உள்ள அவருடைய உறவினரை வெகுவாகப் பாதித்துள்ளது.
எனவே தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்ப்பதற்கு வசதியாக முருகனை ஜாமீனில் எடுப்பதற்காக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும் முயற்சியில் அவர் தரப்பு வக்கீல்கள் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தற்போது கரோனோ ஊரங்கு பிரச்சனைகள் உள்ள நிலையில் முருகன் ஜாமீன் வழக்கு இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றே தெரிகிறது.
பல ஆண்டுகளாக 4 மாநில காவல்துறைக்கும் டிமிக்கி கொடுத்த முருகன் இந்த வழக்கில் சிக்கிச் சிறையில் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதே தற்போதைய செய்தி!