ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் கிராமம் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஒரு மாற்றுதிறனாளி. இவருக்கு நாகராஜ் என்ற ஒரே மகன். நாகராஜ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் போர்வெல் லாரிக்கு வேலைக்கு சென்று வந்தார்.
சென்ற செப்டம்பர் மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு போர்வெல் போட லாரியுடன் நாகராஜ் சென்றுள்ளார். அதன் பிறகு கடந்த 10 மாதங்களாக வீடு திரும்பவில்லை. இது சம்பந்தமாக நாகராஜின் தந்தை சண்முகம் போர்வெல் லாரியின் உரிமையாளர்களிடம் பலமுறை என் மகன் எங்கே என கேட்டும் அவர்களிடமிருந்து முறையாக எந்த பதிலும் இல்லை. இதனால் தொடர்ந்து பரிதவிப்புக்கு ஆளான சண்முகம் மகனை என்னவோ செய்து விட்டார்கள் என சந்தேகமடைந்தார்.
"போர்வெல் லாரி வேலைக்கு சென்று மாயமான தனது மகனை மீட்டுக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். அந்த மனுவில், என் மகன் மாயமான விஷயத்தில் அந்த போர்வெல் லாரி உரிமையாளர்கள் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். என் மகனை மீட்டுக்கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். "ஐயா என் மகன் காணாமல் போய் ஒரு வருடமாகப் போகிறது அவன் உயிருடன்தான் இருக்கிறான என்று கூட தெரியவில்லையே" என கண்ணீர் விட்டார் முதியவர் சண்முகம்.