Skip to main content

'திருச்சி அதிமுக வேட்பாளர் பரப்பும் அவதூறு வீடியோ' -பதிலடி கொடுக்கும் மதிமுக இணையதள அணி

Published on 20/10/2024 | Edited on 20/10/2024
'Trichy AIADMK candidate spreading defamatory video' - MDMK website team responds

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக வேட்பாளர் கருப்பையா, மதிமுவின் முதன்மை செயலாளரும், தற்போதைய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவை பற்றி பொய்யான தகவலை வீடியோ மூலம் நேற்றிலிருந்து பரப்பி வருவதாக மதிமுகவின் மினர்வா ராஜேஸ் வீடியோ மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

மதிமுகவின் இணையதள அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ''கருப்பையாவிற்கு வணக்கம். திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தோற்றதில் இருந்து நீங்கள் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறீர்கள். தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து பரப்ப ஆரம்பித்து விட்டீர்கள். துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை மக்களுக்காக பணியாற்றி வருகிறார். 14 வருடமாக திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலங்கள் கையகப்படுத்துவதில் காலதாமதமாகி இருந்தது. இப்பொழுது அவர் வந்தபிறகு மாநில அரசினுடைய ஒத்துழைப்போடு நிலம் கையகப்படுத்தும் பணியை முடித்துக் கொடுத்துள்ளார்.

பன்னாட்டு விமானங்கள் திருச்சியில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்காக ஒன்றிய விமானத்துறை அமைச்சரை பார்த்து கோரிக்கை வைத்துள்ளார். அதன் பலனாக அபுதாபிக்கு புது விமானம் விடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து நேரடியாக டெல்லிக்கு விமான சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அதுவும் கூடிய விரைவில் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரும் பொழுது 'அரைவல்' ஏரியாவில் இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த இடம் இல்லை. அதை திருச்சி ஏர்போர்ட் அத்தாரிட்டி இடம் சொல்லி ஏற்படுத்த சொல்லி இருக்கிறார். இவையெல்லாம் விமான நிலையம் சார்ந்த பணிகள்.

mdmk

மற்ற பணிகள் என்னவென்றால் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளிநாட்டில் வேலைக்குப் போனவர்கள் விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை திரும்ப கொண்டு வர மாதக்கணக்காக ஆகும். அதில் தலையிட்டு ஒரு வாரத்தில், அதிலும் மூன்று நாட்களில் இறந்தவர்கள் உடலை குடும்பத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இப்படி ஐந்து உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மூன்று உடல்கள் திருச்சி நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட தொகுதியைச் சேர்ந்த மக்களுடைய உடல்கள். அதற்கு நானே ஒரு சாட்சி. கத்தாரில் இருந்து இறந்தவரின் உடலை நானே ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தேன்.

ஒன்றிய அரசு மறைமுகமாக இந்தி திணிப்பை செய்து கொண்டு வருகிறார்கள். புதிய தேசிய கல்விக் கொள்கையை  அமல்படுத்தவில்லை அதனால் உங்களுக்கு தர வேண்டிய ரூபாய்யை தரமாட்டோம் என்கிறார்கள். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அல்ல மொத்தம் 520 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். அதை கேட்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் டெல்லிக்கு சென்றிருந்தார். அவருடன் சேர்ந்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பார்த்து எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி நிலுவைத் தொகையை கொடுங்கள் என போராடி முறையிட்டு வந்திருக்கிறார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்ன செய்ய வேண்டுமோ அந்த பணியை துரை வைகோ செய்து வருகிறார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் சில இடங்களில் சுத்தமாகவே இல்லை அதற்காகவும் வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு துரை வைகோ தயாராக இருக்கிறார். மக்கள் மத்தியிலும் செய்தியாளர்கள் மத்தியிலும் இதற்கான விழிப்புணர்வை கொடுத்து வருகிறார். இவ்வளவு பணிகளை அவர் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் மக்களை சந்திக்க மாட்டார். இதுதான் கடைசி சந்திப்பு என்று சொல்கிறீர்கள். தேர்தலில் தான் பொய்யாக பிரச்சாரம் செய்கிறீர்கள். தேர்தல் முடிந்த பிறகாவது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே.

நீங்கள் செய்யாவிட்டாலும் செய்பவர்களை செய்ய விடுங்கள் அதுதான் அழகு. அடுத்த தேர்தலில் போட்டி போட வேண்டுமென்றால் கொஞ்சம் நன்றாக நடந்து கொள்ளுங்கள். துரை வைகோ மற்ற அரசியல்வாதி மாதிரி சொல்லிட்டு போகின்றவர் கிடையாது. அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து அவர் வரவில்லை. வைகோ என்ன சொன்னாரோ அந்த சொல்படி துரை வைகோ கடைசிவரை நிற்பார். எனவே நீங்கள் தைரியமாக நம்பலாம். ஐந்து வருடத்தில் ஐந்து மாதம் தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளேயே அவர் இவ்வளவு பணிகளை செய்து இருக்கிறார். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பணியாற்றுவார். உங்கள் வீட்டு முகவரி இருந்தால் கொடுத்து விடுங்கள். அவர் வருட வருடம் என்ன செய்கிறார்; என்னென்ன பணிகளை செய்கிறார் என்று ஒரு புத்தகத்தை போட்டு உங்கள் வீட்டுக்கு ஒரு காப்பியை அனுப்பி வைக்கிறோம். அதைப் படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்