பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்துத் தரக்குறைவாகப் பேசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் சட்டத்தின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதியப்பட்டது.
அதேபோன்று கடந்த 2020 ஆம் ஆண்டு சமூக வலைத்தளப் பக்கத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறாகப் பேசியது தொடர்பாகவும் யூட்யூபில் தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிந்தனர். இது தொடர்பான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த வழக்குகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்கிவிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டிருப்பதாக எஸ்.வி. சேகர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிக்கட்டிவிட முடியாது. தனக்கு வந்த தகவலை ஃபார்வர்டு செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பு. எஸ்.வி. சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.