சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு போட்டிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக போட்டி நடைபெற இருக்கிறது. இந்த கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் உடலுக்கு, காவல் ஆணையர் அருண் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த சிவக்குமார், கொளத்தூர் காவல் உதவி ஆணையராக பதவி புரிந்து வந்தார். சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு தீவுத்திடல் பகுதியில் சிவக்குமார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது உடல், இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உள்ளிட்ட சக போலீசார் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, சிவக்குமாரின் உடலுக்கு சென்னை காவல் ஆணையர் அருண், அஞ்சலி செலுத்தினார். அதன் பின்பு, உயிரிழந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.25 லட்ச காசோலையை அவரின் குடும்பத்துக்கு காவல் ஆணையர் அருண் வழங்கினார்.