உலக உணவு தினத்தை முன்னிட்டு, வேளாண்மை உழவர் நல துறையின் 'அட்மா' திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை சார்பில் பாரம்பரிய ரகங்களின் வேளாண் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர்கள் பிரேம் சாந்தி, பூங்கோதை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் பிரேமலதா, மாவட்ட விற்பனை குழு செயலாளர் விஜயா, வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகிராமன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், கடலூர் கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சிலம்பரசன், அட்மா திட்ட மேலாளர் உமா மகேஸ்வரி, வேளாண் அறிவியல் நிலைய நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் காயத்ரி உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் செயல்படும் இயற்கை விவசாய குழுக்கள், பாரம்பரிய ரகங்கள், அரசின் புதிய திட்டங்கள், மண் வளம், மண் பரிசோதனை, பாரம்பரிய ரகங்கள் மதிப்பு கூட்டுதல், பாரம்பரிய தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி, விதை உற்பத்தி, விற்பனை வாய்ப்புகள், நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், பயிர் காப்பீடு செய்யும் வழிமுறைகள், இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் முறைகள், கால்நடையில் பாரம்பரிய ரகங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், வேளாண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பாரம்பரிய ரகங்கள், சாகுபடி, விவசாயிகளின் தேவைகள், விற்பனை வாய்ப்புகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். விழாவில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் கருப்பு கவுனி, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, அடுக்கு நெல், யானை கொம்பன், மடுமுழுங்கி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களும், மூலிகை பொருட்கள், நாட்டு வகை காய்கறிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
கருத்தரங்கில் ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை கண்டுகளித்ததுடன் பாரம்பரிய விதைகளை வாங்கியும், பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை உண்டும் மகிழ்ந்தனர். இதுபோன்ற பாரம்பரியம் சார்ந்த வேளாண் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி, தமிழக அரசு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரங்களை, அந்தந்த பகுதிக்குட்பட்ட வட்டாரத்துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
வேளாண்துறை அதிகாரிகள் பாரம்பரிய வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு அதில் சிறப்பாக கண்காட்சி அமைத்திருந்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், திருமுட்டம், நெய்வேலி பகுதிகளில் இருந்து அட்மா திட்டத் தலைவர்கள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் நன்றி கூறினார்.