பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில், அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர். ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பொதுக்குழு, செயற்குழு நிறைவடைந்த பிறகு, சென்னை இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09/01/2021) மாலை கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். ஆலோசனை நடத்தவுள்ளனர்.