தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடந்தது. இதனையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது. இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைக்கக் கோரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை திமுக சார்பில் டி.ஆர். பாலு எம்.பி. வழங்கியுள்ளார். அந்த நோட்டீசில், “தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதனால் விளைநிலங்களில் விளைந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களின் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. எனவே மழை வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்தும் தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். அதில், “தமிழகத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். புயலால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை மதிப்பிடுவதற்கு மத்தியக் குழுவை நியமிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.