Skip to main content

1000 ரூபாய் கேட்டால் 3000 ரூபாய் கொடுத்த ஏடிஎம்; வேலூரில் பரபரப்பு

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

ATM that gives 3000 rupees if you withdraw 1000 rupees due to mechanical failure

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்ரோடு பகுதியில் ஸ்டேட் பாங்குக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இரவு இங்கு கார்டு போட்டு 1000 ரூபாய் கேட்டு எண்டர் செய்தால் அது ஆறு 500 ரூபாய் நோட்டுகள் என மூன்று ஆயிரம் ரூபாய் தந்துள்ளது. இதனை அறிந்த பலர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இதுகுறித்து குடியாத்தம் நகர காவல்துறையினருக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்தில் தற்காலிகமாக சோதனை மேற்கொண்டு ஏடிஎம் மையத்தை மூடினர். 

 

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது, தொழில்நுட்ப கோளாறால் ஆயிரம் ரூபாய்க்கு பதில் 3 ஆயிரம் ரூபாய் வந்ததாகவும் ஒரு 500 ரூபாய் நோட்டும் ஐந்து 100 ரூபாய் நோட்டுகள் வரவேண்டியதற்கு பதிலாக ஆறு 500 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இப்படி இருந்தா எப்படி ஓட்டுக்கேட்க முடியும்?” - கவுன்சிலரை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.எல்.ஏ

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
MLA advised the councillors to do the panchayat work properly

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்ட அடுத்த வெட்டுவானம் பகுதியில் எம்.எல்.ஏ நந்தகுமார் இன்று (18.7.2024) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைவருக்கும் குடிநீர் வழங்கும் அம்ரித் திட்டப் பணிகளில் தோண்டப்பட்ட குழிகளில் சரியான முறையில் ஒப்பந்ததாரர் சிமெண்ட் பேட்ச் ஒர்க் சரிவரச் செய்யாததால் பள்ளமாக இருந்தது.

உடனடியாக இதை அனைத்தையும் கொத்தி எடுத்து விட்டு மீண்டும் சிமெண்ட் சாலை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பணிகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது எனக் கவுன்சிலர்களைக் கடிந்து கொண்டார்.

தொடர்ந்து வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுமார் 43 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என அதிகாரிகள் இடத்தில் அறிவுரை வழங்கினார்.

Next Story

காவல் ஆய்வாளர் மீது தொடர் புகார்; பாய்ந்த அதிரடி நடவடிக்கை!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Transferred to  armed forces after   complaints against the police inspector

சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வேலூர் மாவட்ட காவல்துறையில் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஆய்வாளர் ராஜா சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகார் கொடுக்க வருபவர்களையே தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு உட்பட்டப் பகுதியில் அதிக குற்றச்செயல்கள் நடப்பதாகவும், அதே பகுதியில் பாலியல் தொழில் நடப்பது தெரிந்தும் ராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜாவை உயர் அதிகாரிகள் இரண்டு மூன்று முறை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனாலும் காவல் ஆய்வாளர் ராஜா தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜாவை வேலூர் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.