திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து கோடை இளவரசியை ரசித்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் தான், கடந்த ஆண்டு தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. கொடைக்கானலுக்கு வெளி ஊரில் இருந்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானல் நகரில் வசிக்கும், சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும், சாலையோர கடை வைத்திருப்பவர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், குதிரை வைத்திருப்போர், சுற்றுலா வழிகாட்டிகள் என நூற்றுக்கணக்கானோர் வேலை இழந்தும், அவர்களின் குடும்பத்தினர் உணவிற்கே கஷ்டப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
தற்போது தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளைப் பிறப்பித்துள்ளது. அதில் சுற்றுலாத் தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 20ம் தேதி முதல் கொடைக்கானலுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை. தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ள வெளியூர் நபர்களும் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு போலவே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கருதிய கொடைக்கானல் வாழ்மக்கள், தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவில் சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் விலக்கு அளிக்க வலியுறுத்தி மூஞ்சிக்கல்லில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிறு வியாபாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டு நாங்கள் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்ப தான் வாங்குன கடனை எல்லாம் அடைச்சுகிட்டு இருக்கோம். மே மாசம் சீசன் இருக்குறதுனால, மொத்த கடனையும் அடச்சுறலாம்னு நினைச்சோம். இப்ப திடீர்னு இப்படி ஒரு அறிவிப்பை தமிழக அரசு அறிவிச்சு எங்களை கலங்க வச்சுட்டாங்க. அதுனால கட்டுப்பாடுகளோட தளர்வு அறிவிச்சாலே நாங்க பிழைச்சுக்குவோம். இந்த சீசனும் எங்களுக்குப் போயிருச்சுனா நாங்க பிச்சை எடுப்பதைத் தவிர வேறுவழி இல்லை இப்பகூட ஏரியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்துவிட்டு இந்தப் போராட்டத்தில் வந்து இருக்கிறோம். அதுபோல் நகரில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்துவிட்டுத்தான் ஒட்டு மொத்த வியாபாரிகளும் மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறோம்’ என்று கூறினர்கள்.
கொடைக்கானல், பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால் இத்தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில் குமார், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐ.பி.செந்தில்குமார், “கொடைக்கானல் நகர மக்கள் சார்பில், 'மக்கள் பிரதிநிதி' என்ற முறையில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். கொடைக்கானலில் உள்ள கோட்டாச்சியர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி இதற்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்து இருக்கிறார். அதன்மூலம், கொடைக்கானல் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்” என்று கூறினார்.