வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த 19 பேர் நேற்று மினி பேருந்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு ஏற்காட்டில் இருந்து சென்னை திரும்புவதற்காக இன்று மதியம் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்காடு மலையடிவாரத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே மினி பேருந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மினி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் ஏற்காடு மலையடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.