கோவையில் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அங்கிருந்த பல்வேறு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒட்டகம் ஒன்றை சிலர் தாக்கி துன்புறுத்தும் காட்சி ஒன்று வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் அது கோவையில் நிகழ்ந்த சம்பவம் என்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கோவை சூலூரில் இயங்கி வந்த சங்கமித்ரா என்ற விலங்கு பண்ணையில் இந்த கொடுமை நிகழ்ந்தது தெரிய வந்தது.
அந்த விலங்கு பண்ணையில் சட்டவிரோதமாக விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. உடனடியாக விலங்கு நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காட்சிப்பொருளாக பயன்படுத்த ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை உரிய அனுமதி இல்லாமல் அடைத்து வைத்ததாக தெரியவந்தது. இந்த சோதனையில் ஐந்து ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதை உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் விலங்கு நல வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட ஒட்டகங்கள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாக நடத்தி வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர்.