கடந்த ஒரு மாத காலமாக விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 80 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி விலை கிலோவிற்கு 60 ரூபாய் வரை உயர்ந்தது. இதன் மூலம் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
இதையடுத்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலையான ரூ. 60க்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்கிப் பயன்பெறுங்கள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால், கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் வெளிச் சந்தைகளில் விற்கப்படும் தக்காளியின் மொத்த விலை 50 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தக்காளியின் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.