பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பண்டிகை குறிப்பாக விவசாயிகளின் பண்டிகை. இந்த பொங்கல் பண்டிகையை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவுள்ளார்களா என்றால் இல்லை என்பதே பெரும்பாலான விவசாயிகளின் கருத்தாக உள்ளது. அதற்கு காரணம், தாங்கள் விளையவைத்த பொருட்களுக்கு சரியான விலையில்லாமல் விவசாயிகள் கடன்காரர்களாக இருப்பதே. எங்களிடம் கிலோ 5 ரூபாய்க்கு வாங்கப்படும் பொருள் சந்தையில் 40 ரூபாயாக விற்கிறார்கள். பொருளை விளையவைத்த விவசாயி நட்டத்தில் உள்ளான், அதை வாங்கி விற்பவன் லாபத்தில் கொழுக்கிறார்கள் என புலம்புகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், பாண்டிச்சேரி டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் மேல்செங்கம் அரசு விதைப்பண்ணை எதிரே சாலையோரம் நூற்றுக்கணக்கான கிலோ தக்காளியை சாலையோரம் நீண்ட தூரத்துக்கு கொட்டி வைத்திருந்தனர். அதனை அங்குள்ள 50க்கும் அதிகமான குரங்குகள் சாப்பிட்டுக்கொண்டுயிருந்தன.
இதுப்பற்றி மேல்செங்கம்வாசி ஒருவரிடம் விசாரித்தபோது, ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்ன்னு மார்க்கெட்ல விற்கறாங்க. குட்டியானை வண்டிகள்ள வச்சி விற்கறவங்க. 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை வச்சி விற்கறாங்க. இன்று விவசாயிகள், தக்காளி பறித்து கூடையில் போட்டு வண்டியில் ஏத்திக்கொண்டுப்போய் கமிஷன் மண்டியில் விற்பனைக்கு வைத்தால் கிலோ 3 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். 100 கிலோ விற்பனைக்கு வைத்தாலும் 300 ரூபாய் தான். அதிலும் மண்டி கமிஷன் 30 ரூபாய் போக 270 ரூபாய் தான் கைக்கு தருகிறார்கள்.
இது தக்காளி பறிப்பு கூலி, வாகன கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை. இதில் விரக்தியான இந்த பகுதி விவசாயிகள் சிலர் தான் பறித்துக்கொண்டு வந்த தக்காளியை கொண்டு வந்து இப்படி சாலையோரம் கொட்டி அந்த குரங்குகளாவது பசியாறட்டும் என போட்டுவிட்டு மனவேதனையோடு போனார்கள் என்றார்.
விவசாயிடம் 3 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளியை வாங்கும் வியாபாரிகள் அதனை 10 முதல் 15 ரூபாய் என விலை வைத்து விற்கிறார்கள். ஆக கிலோவுக்கு சுமார் 10 ரூபாய் லாபம் வைத்து விற்கிறார்கள். தக்காளி மட்டும்மல்ல வெண்டைக்காய், கத்தரிக்காய், பாவக்காய் என பல காய்களை விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி, வியாபாரிகள் கொள்ளை விலைக்கு விற்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
விவசாயிகளே தங்காள் விளைவித்த பொருளை நியாயமான விலையில், மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய கலைஞரால் 1996ல் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தைகளை, அதிகாரிகள் துணையுடன் வியாபாரிகள் கைப்பற்றிக்கொண்டு கடைப்போட்டு அங்கும் கொள்ளையடிக்கின்றனர். உண்மையான விவசாயிகள் அந்த உழவர் சந்தைகளுக்கு வெளியே நின்று கீரை உட்பட தங்களது பொருட்களை விற்பனை செய்கின்றனர்.