கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மே.03 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்.20 முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஏற்கனவே ஒரு மாத காலத்திற்கும் மேலான ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருமானம் இன்மையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை நாளை முதல் மீண்டும் வசூலிப்பது அத்தியாவசியப் பொருட்களின் விலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், அதிகரிக்கும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் சொல்லொன்னா துயரங்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இதன் காரணமாக தன்னார்வலர்கள் செய்து வரும் மனிதநேயப் பணிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படும். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் தன்னார்வலர்கள் திட்டமிட்ட பயனாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும். இதனால் ஏழை-எளிய மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவர்.
ஏற்கனவே ஒப்பந்தக் காலத்தையும் தாண்டி பல ஆயிரம் கோடி சுங்கக் கட்டண வசூல் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிய தனியார் சுங்க நிறுவனங்களுக்கு பேரிடர் காலத்திலும் கொள்ளை லாபம் ஈட்ட அரசு வழிசெய்து கொடுத்து, அதன் சுமையை மக்கள் மீது திணிப்பது ஏற்புடைய செயல் அன்று.
அதோடு தற்போது பொதுவான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மிகப்பெரும் அளவில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறப் போவதில்லை. ஆகவே, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, மீண்டும் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படும் வரையிலான சகஜ நிலை திரும்பும் வரை சுங்கக் கட்டண வசூலைச் செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய பேரிடர் காலத்தில் சேவை நடவடிக்கைகளுக்கே அரசு முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர லாப நோக்க வணிக நடவடிக்கைகளுக்கு அல்ல என்பதையும் நாங்கள் அரசுக்கு சுட்டிக்காட்டுகின்றோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.