டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக சுமார் 30- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து டிஎன்பிஎஸ்சி வழக்குகள் அனைத்தும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் ஜெயக்குமாரை நாளை (07/02/2020) காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை (07/02/2020) காலை ஆஜர்படுத்தும் வரை ஜெயக்குமாரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே குரூப் 4 முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என்று சரணடைந்த ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் எந்த ஆதாரமும் இல்லாமல் தன் பெயரை கெடுக்கும் நோக்கில் இந்த வழக்கில் காவல்துறை செயல்படுவதாகவும், மக்களிடம் நன்மதிப்பைப் பெற பொய் குற்றச்சாட்டுகளை காவல்துறை சுமத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.