Skip to main content

கனகசபை விவகாரம்; பக்தர்கள் ஏறி வழிபட பாஜகவினர் எதிர்ப்பு

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

chidambram ganagasabai issue against for bjp

 

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி பக்தர்கள் வழிபட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர்.

 

அதன் பெயரில் காவல்துறையினர் இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த 24ஆம் தேதி பதாகையை அகற்ற சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீட்சிதர்கள் தகராறு செய்தனர். இதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. பின்னர் பதாகையை அகற்றிய பிறகும் தீட்சிதர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் ஏறி வழிபட மறுத்து வந்தனர்.

 

chidambram ganagasabai issue against for bjp

 

இந்த நிலையில் 27 ஆம் தேதி மாலை பக்தர் ஜெமினி ராதா உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டவர்கள் கனகசபை வாயிலில் அமர்ந்து கனகசபையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது பாரதிய ஜனதா கட்சியினர், சங்பரிவார் அமைப்புகள் அங்கு கூட்டமாக வந்து இவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கோவிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

 

chidambram ganagasabai issue against for bjp

 

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் கனகசபையின் மற்றொரு வழியாக ஏறி வழிபட முயன்றனர். அதற்கு தீட்சிதர்கள் அவர்களை ஏறவிடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டனர். அதைத் தொடர்ந்து தீட்சிதர்கள் அனைவரும் கனகசபையை பூட்டிவிட்டு கீழே வந்து காவல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவில் நகையைத் திருட வந்தார்கள் எனக் கூறி தீட்சிதர்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்