கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாஜக மற்றும் திமுகவினரிடையே சுவரில் விளம்பரம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், திமுகவினர் சுவர் விளம்பரம் செய்துள்ள பகுதிகளில் அதனை அழிப்பதாக அறிவித்து கரூர் பாஜக கட்சி அலுவலகம் முன்பு அக்கட்சியினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டதால் அங்கு உடனடியாக பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், சுமூக பேச்சுவார்த்தையை ஏற்காத பாஜகவினர் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வரையப்பட்டிருந்த திமுக சுவர் விளம்பரத்தை கருப்பு பெயிண்ட் கொண்டு அழிக்கச் சென்ற இரண்டு பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் அணுகு சாலை முழுவதையும் மறித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார், பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.