புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள். இதில் மூத்த மகள் ஷாலினி (வயது 4) கடந்த மாதம் 25 ந் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஷாலினியை காணவில்லை. இதனால் குடும்பத்தினரும் உறவினர்களும் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள்.
இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஷாலினி பிணமாக கிடந்தாள். அருகில் தின்பண்டங்கள் சிதறிக்கிடந்தது. இதை கண்ட ஷாலினியின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சம்பவம் குறித்து இலுப்பூர் டி எஸ் பி கோபாலசந்திரன் தலைமையில் இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சுமதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமியை கொன்றவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் கைகளில் அதிகமான மந்திரக்கயிறு மற்றும் காப்புகளுடன் சுற்றிய அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் மனைவி சின்னப்பிள்ளை (வயது-47) மீது சந்தேகமடைந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
முதலில் தனக்கு தெரியாது என்ற சின்னப்பிள்ளையை தொடர்ந்து விசாரணை செய்த போது.. தான் ஒரு மந்திரவாதி என்றும் தன்னை நம்பி பலர் வருகிறார்கள். இந்த நிலையில் தலைச்சான் குழந்தை ரத்தத்தில் பூஜை செய்தால் மந்திர சக்தி அதிகரிக்கும் என்பதால் ஷாலினி கழுத்தை அறுத்து ரத்தம் எடுத்து பூஜை செய்தேன் என்று விசாரணையில் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மந்திர சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால் சிறுமி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.