டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து 30- க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் இடைத்தரகராக ஜெயக்குமாரும், சித்தாண்டியும் செயல்பட்டது தெரியவந்ததால், அவர்களின் இல்லங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக ஜெயக்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஏற்கனவே ஜெயக்குமார் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி அறிவித்திருந்த நிலையில் சரணடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.