இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "கரோனா முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது தெரியவந்துள்ளது. வெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்ற வேண்டாம். வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றுவது தெரிந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதைப் பிறர் அறியும் வகையில் வீடுகளில் கரோனா தொற்று, உள்ளே நுழையதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீஸ் ஒட்டப்படும். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் ஓட்டுவதற்கான ஸ்டிக்கர்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி. வெளிநாடுகளில் இருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தபட்டவர்கள் அரசின் உத்தரவை மீறினால் அதீத நடவடிக்கையாக பாஸ்போர்ட் முடக்கப்படும்." இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டோர் அரசின் அறிவுரையை மீறி வெளியே சுற்றுவதால் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.