சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களைக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கத் தடைகோரி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னத்தை அக்கட்சி சார்பில் போட்டியிடுவோருக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களின் மனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களைக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.