அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் அந்தக்கட்சியின் தலைவியாக இருந்த ஜெ வின் சிலைகளை வெளிப்படையாக விழா எடுத்து திறக்க முடியாமல் யாருக்கும் தெரியாமல் நடுஇரவில் திறப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் அதிமுகவிலேயே ஆத்திரம் கொப்பளிக்கிறது. கடந்த ஆண்டு தஞ்சையில் ரயிலடியில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெ சிலையை இரவில் திறந்தார்கள்.
இன்று (07.01.2020)... திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒரு காலத்தில் அதிமுகவின் அதிகார மையமாக இருந்து இப்போது சின்னாபின்னமாக உடைந்து காணப்படுகிறது. இங்குள்ள கட்சி அலுவலகம் முன்பு தெற்கு வீதி கிழக்கு வீதி சந்திக்கும் இடத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையை திறந்தால் அமைச்சர் காமராஜ்க்கு நல்லதில்லை என்று ஜோதிடர்கள் சொன்னதால் மூடி வைத்திருந்ததாக அக்கட்சியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். அதையும் மீறி கடந்த ஆண்டு மர்ம நபர்கள் இரவில் சிலையை திறந்து மாலை அணிவித்துச் சென்றதால் பதறிய அமைச்சர் உடனே சிலையை மூடி இரும்பு தடுப்புகளை அமைக்கச் செய்தாராம்.
இந்த நிலையில் இன்று (07.01.2020) காலை அந்தப் பக்கம் வந்தவர்களுக்கு வியப்பு. காரணம், இரும்பு தடுப்புகளுக்குள் இருந்த எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெ. சிலையையும் சேர்த்து திறந்து மாலை அணிவித்து சென்றுள்ளனர்.
இரும்பு தடுப்புகளை உடைத்து புதிய ஜெ. சிலையை கொண்டு வந்து வைத்து மாலை அணிவிக்க குறைந்தது 3 மணி நேரமாவது நடந்திருக்கும். இவ்வளவு நேரம் இருந்து சிலைகளை அமைத்த மர்ம கும்பல் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் மிகப் பெரிய தலைவர்களாக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா. இவர்கள் இரண்டு பேரின் பெயர்களைப் பயன்படுத்தாமல் அதிமுக அரசியல் இல்லை. அப்படியான தலைவர்கள் சிலைகளை கோலாகலமாக திறப்பதைவிட்டு இப்படி இரவில் திறந்திருப்பது வேதனை அளிப்பதாக அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களான ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தப்படுகின்றனர்.
மற்றொரு பக்கம் இது அமைச்சர் காமராஜுக்காக திறக்கப்பட்டது. அதாவது இந்த சிலைகளை திறந்தால் தன் பதவிகளுக்கு ஆபத்து வரும் என்று ஜோதிடர்கள் சொன்னதால் தான் எம்.ஜி.ஆர். சிலையை திறக்காமல் இரும்பு தடுப்பு அமைத்து வைத்திருந்தார். இப்ப அவரை அச்சப்படுத்தவே இப்படி இரவில் ஒரு கும்பல் சிலைகளை திறந்துள்ளது என்கிறார்கள்.