சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையடிவாரப் பகுதியில் உள்ளது பெருமாபட்டு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை நீதி என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இப்பகுதி மலையடிவாரப் பகுதி என்பதால் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலத்தைக் காப்பதற்காக நிலத்தின் குத்தகைதாரரான நீதி, வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடமும் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.
இத்தகைய சூழலில் தான் இதே பகுதியைச் சேர்ந்த கரிபிரான் என்ற முதியவரும், அவருடைய நண்பரான சிங்காரம், சிங்காரத்தின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் நேற்று (21.09.2024) இரவு வனவிலங்கு வேட்டைக்காக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது நீதி அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி மூன்று பெரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான நீதியை போலீசார் கைது செய்து, விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.