Skip to main content

கிராம மக்களின் சேமிப்பு பணத்தை கோடிக்கணக்கில் மோசடி செய்த தபால் ஊழியர்கள்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் கிராம தபால் நிலைய அலுவலகத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் சேமிப்பு பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.   பணம் கட்டிய நூற்றுக்கணக்கான பொது மக்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

po

 

 திங்களூர் தபால் நிலையத்தின் கிளை அஞ்சல் நிலையமான வெட்டயங்கிணறு பகுதியில் பகுதி நேர அஞ்சல் நிலையம் உள்ளது.  இதில் செல்வராஜ் மற்றும் பஞ்சையன் ஆகிய தபால் ஊழியர்கள்  பணிபுரிந்து வருகின்றனர்.  திங்களூர் தபால் நிலையத்தை சுற்றி  பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. தபால் ஊழியரான  செல்வராஜ் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு இருந்து வருகிறார்.   இவர் மீது பொதுமக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். 

 

இதனால்  அஞ்சல் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்ட புதிய கணக்குகளை மக்கள் தொடங்கி பணம் கட்டி வந்தனர்.   ஒரு கட்டத்தில் வங்கி கணக்கு புத்தகத்தை அவரிடமே கொடுத்து பணத்தையும் டெபாசிட் செய்துள்ளனர்.   இதில் 100 க்கும் மேற்பட்ட டெபாசிட் என்று செல்லக்கூடிய நிரந்தர வைப்பு நிதியும் உள்ளது.

 

  பெரும்பாலான பொது மக்களிடம்  லட்சக்கணக்கில்  பணம் பெற்றுக்கொண்டு தபால் நிலையத்தில் பணமே செலுத்தப்படவில்லை.   வைப்பு நிதி என்பதால் பல வருடங்களாக யாரும் இதனை கவனிக்கவில்லை.  இது தவிர மாதாந்திர சேமிப்பு தொகை இதனையும் முறையாக கணக்கில் செலுத்தவில்லை.  

 

பாலிசி கணக்கு தொகையை கூட விட்டு வைக்காமல் எடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் செல்வராஜ் உடன் பணி புரியும் பஞ்சையன் திடீரென பணத்தை கையாடல் செய்ததாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பொதுமக்களிடம் தெரிவிக்காமலே தபால் துறையினர் அலட்சியமாக விட்டுவிட்டனர்.

 

po

 

தற்போது வைப்பு தொகை முதிர்வடைந்து பணம் எடுக்க வந்த  ஒருவரின் பணம் கணக்கில் இல்லாததால் செல்வராஜை கேட்டுள்ளனர்.   அதற்கு அவர் ஏற்கனவே இருந்த ஊழியர் கையாடல் செய்து விட்டதாகவும் எனக்கு ஏதும் தெரியாது என கூறியுள்ளார்.    இதனால் பணம் செலுத்திய அனைவரும் திங்களூர் தபால் நிலையத்தில் வந்து சோதனை செய்து பார்த்தபோது ஒவ்வொருவர் கணக்கிலும் வெறும் 100 ரூபாய் மட்டுமே இருந்தது. பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் கண்ணீருடன் பணம் இல்லாத வங்கி கணக்கு புத்தகத்தை வைத்து பணம் திரும்ப வருமா என அதிகாரிகளை கேட்டனர்.

 

அப்போது அங்கே வந்த அஞ்சலக மக்கள் குறை தீர்க்கும் அதிகாரி லாவண்யா வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டு தபால் நிலையத்தில்  கட்டாமல் இருக்கும் தொகையை மட்டுமே தவறு செய்தவர்களிடம் வசூலிக்கமுடியும்.    மற்ற தொகைகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை என கூறியிருக்கிறார்.  பொதுமக்களின் வாக்குமூலத்தை வைத்து பார்க்கும்போது கோடிக்கணக்கில் இருக்கும் என தெரிகிறது.     பொதுமக்கள் சிலர் ஆளுங்கட்சி அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அழைத்து மீட்டு தரும்படி கேட்டுக்கொண்டனர்.   அப்போது தான் அவர்களும் ஏமாந்தது தெரியவந்தது.   இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்