அரசுக்கு வருமானம் வருவதில் சிக்கல் தீர ஒரே வழி மதுவுக்கு பதிலாக பக்கவிளைவுகள் இல்லாத தென்னங்கள், பனங்கள், ஈச்சங்கள் மற்றும் பாரம்பரிய அரிசிகளில் தயாரிக்கப்படும் ஒயின் ஆகியவற்றை கொண்டு வருவது தான் சிறந்தது என்றும், மது விற்பனைக்கு பதிலாக கள் விற்பனையை அதிகரிக்க வழிவகைகள் செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுபானக் கடைக்கு மாற்று நிரந்தரத் தீர்வையும் கூறியுள்ளார்.
அவர் மதுபானக்கடைக்கு தீர்வாக முக்கியமான சில கோரிக்கைகளை விளக்கமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “இரசாயனமில்லா இயற்கை பானங்களான கள்ளை இறக்க அனுமதி அளிக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கள் இறக்கப்பட்டதை பால் கொள்முதல் நிலையங்கள் போன்று தமிழக அரசு விவசாயிகள் மூலம் கள் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும் போதை மாத்திரைகள் கள்ளில் கலந்து விற்காத வண்ணம் முன்னெச்சரிக்கை மற்றும் தொலைநோக்குச் சிந்தனையுடன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை அரசே நேரடியாக வாங்கி ஆவின் நிறுவனம் பால் கொள்முதலுக்கு விலை நிர்ணயம் செய்வது போல விலை கொடுத்து வாங்கி நிர்வாக செலவினங்களை சேர்த்து ஒரு விலை நிர்ணயம் செய்து அதே இடங்களில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் தரம் நிர்ணயம் உறுதிப்படுத்தப்படும். பத நீர் விற்பனையில் அரசு விவசாயிகளை ஈடுபடுத்தலாம். மேலும் அரசே விலை நிர்ணயம் செய்து கொடுக்கலாம். கள் வகைகளில் தென்னங்கள், பனைகள், ஈச்சங்கள் என உள்ளது. பாரம்பரிய அரிசி வகைகளில் ஒயின் தயாரிக்கலாம். மிக எளிமையாக தயாரிக்கவும் முடியும், விற்பனை செய்யவும் முடியும். இந்த வகை ஒயின் 100 சதவீதம் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதது. மக்களை காக்க விரும்பும் அரசு இது போன்ற இயற்கை பொருட்களை விற்பனை செய்ய முன் வருவதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.
இதனால் எந்த குடும்பமும் பாதிக்கப்படாது. விபத்துக்கள் நடக்காது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கிய பானமாக அருந்தலாம். நாம் தயாரிக்கின்ற பொருள் அன்றாடம் கண்ணெதிரே ஆரோக்கியமாக தயாரிக்கப்படுகிறது. மேலும் கெமிக்கல் இல்லை மக்களுக்கு எந்த வித உடல் நலனும் கெட்டுப்போவதில்லை. மக்கள் போராட்டம் செய்யவேண்டிய அவசியமில்லை. நாட்டில் அமைதி நிலவும். அரசுக்கு வருமானம் பெருகும். மேலும் அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உருவாகும். கள் அருந்துவதால் யாரும் மரணமடைய மாட்டார்கள். அரசுக்கு எந்த வித கெட்ட பெயரும் வராது. எந்த பெண்களும் தாலியறுக்கும் நிலை வராது.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும். பனை வெல்லம், பனங்கற்கண்டு, பத நீர், பனங்கருப்பட்டி, தென்னை வெல்லம், பனஞ்சீனி, தென்னஞ்சீனி தயாரிக்கலாம் இதன் மூலம் அரசு உள்நாட்டு வணிகம் மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருவாயினைப் பெருக்கி கொள்ள முடியும். பனை மூலமாக கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம். மேலும் ஆவின் பொருட்கள் போன்று பனை மதிப்புக் கூட்டிய பொருட்களை கள் விற்பனை செய்யும் இடங்களிலேயே பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் அரசுக்கு வருவாய் பெருகும் என்பது உறுதி. இது காலத்திற்கேற்றாற் போல அரசு தாமதிக்காமல் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இது கடந்த 25 ஆண்டுகளாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கொள்கை” என தெரிவித்தார்.