பொள்ளாச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச வீடியோ எடுத்த குற்றவாளிகளின் ஆணுறுப்பை அறுத்தெறிய வேண்டும் எனக்கோரி, சேலத்தில் அரசுக்கல்லூரி மாணவர்கள் புதன்கிழமையன்று (மார்ச் 13, 2019) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி, ஆபாச படம் எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது. பாலியல் கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவிகள். இச்சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்த குமார் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிபிசிஐடி காவல்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கவும், முழு அரசியல் பின்னணியை வெளிக்கொண்டு வரவும் கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில், அரசு இருபாலர் கலைக்கல்லூரியில் படித்து வரும் அனைத்து இந்திய மாணவர் சங்கம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் புதன்கிழமையன்று (மார்ச் 13) வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்றும், உடனடியாக கலைந்து செல்லும்படியும் கூறினர். எனினும், பாலியல் குற்றவாளிகளைக் கண்டித்து மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து அனைத்து இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கூறுகையில், ''பொள்ளாச்சியில் மாணவிகளை மிரட்டி பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ள கும்பலில் நான்கு பேரை மட்டும்தான் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம். அவர்களையும் பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்ய வேண்டும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட அவர்களுக்கும், ஈடுபடுவோருக்கும் அவர்களுடைய ஆணுறுப்பை அறுத்தெறியும் வகையில் தண்டனையில் திருத்தம் செய்ய வேண்டும். அல்லது, பாரபட்சமின்றி தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியும். குற்றத்தில் ஈடுபடவே பலருக்கும் அச்சம் ஏற்படும். இன்னும் ஓரிரு நாள்களில் மாணவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.