விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திண்டிவனம் அருகே முனுசாமி என்பவர் செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.இடி மின்னலுடன் மழை பெய்தது கண்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் நேரத்தில் மின்னல் தாக்கியதில் முனுசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவருடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி அதே பகுதியைச் சேர்ந்த விசுவநாதன், அவ்வையார் குப்பத்தைச் சேர்ந்த ராமு ஆகிய மூவரும் மின்னல் தாக்கியதில் முகம், கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. ஊட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் படிக்கும் 27 வயது கண்ணன் அப்பகுதியில் மாடுகளை ஓட்டிக் கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டடிருந்தார். அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. அந்த நேரத்தில் வயல்வெளிகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், ஆடு மாடு மேய்க்கச் சென்றவர்கள் இடி மின்னல் தாக்கி இறக்கும் துயரம் தொடர்ந்து நடந்துவருகின்றது.