Skip to main content

சென்னை அண்ணா நகரைவிட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது!- வேதாந்தா தரப்பு வாதம்!

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கைபடி மக்கள் வாழ்வதற்கு சென்னை அண்ணா நகரை விட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது என வேதாந்தா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வருகின்றனர்.

THOOTHUKUDI STERLITE ISSUES CHENNAI HIGH COURT


 

நேற்று (19- ஆம் தேதி) வாதம் நடைபெறும் 32- வது நாள். வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ் ராமன், 1995- ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை திறந்த போது போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள், அதன் பின்னர், 2013- ஆம் ஆண்டு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

ஆனால் 2017- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து திடீரென ஸ்டெர்லைட் நிர்வாகத்தை முழுமையாக மூட வேண்டும் என போராட ஆரம்பித்தனர். 2018- ஆம் ஆண்டு மே 21- ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, மே 23- ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

THOOTHUKUDI STERLITE ISSUES CHENNAI HIGH COURT

அதேபோல, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. துப்பாக்கிச் சூட்டை தமிழக அரசுதான் நடத்தியது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடியில் காற்று மற்றும் நீர் மாசு குறைந்து விட்டதாக அரசு கூறுவது தவறு.
 

வேலூர் தோல் தொழிற்சாலை, திருப்பூர் நூல் ஆலைகளை விட ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துகிறதா? மேலும், தூத்துக்குடி சிப்காட்டில் மாசு ஏற்படுத்தக் கூடிய ஆலைகளை மூட வேண்டும் என்றால், முதலில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தைத்தான் மூட வேண்டும்.
 

அதுபோல, அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின் படி, தூத்துக்குடியில் லட்சத்தில் 63 பேர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் ( லட்சத்தில் 80 பேர்) அளவை விட குறைவு.
 

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கைபடி மக்கள் வாழ்வதற்கு சென்னை அண்ணா நகரை விட ஸ்டெர்லைட் வளாகம் பாதுகாப்பானது என்றும் மனித உடல்நல குறியீட்டின் பட்டியலில் தூத்துக்குடி 3- வது இடத்தில் உள்ளது.
 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வுபடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னரும் தூத்துக்குடியில் காற்று மாசில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 90 AQI (Air Quality Index) அளவில் தான் உள்ளது. இது சென்னை, டெல்லியை விட குறைவானதுதான் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இன்றும் (20.12.2019) விவாதம் தொடர்கிறது.




 

சார்ந்த செய்திகள்